“என் அமுது ஒரு கலைஞன்”.. அமுதவாணனை கண்கலங்க செய்த பிக்பாஸ்.. நெகிழ்ந்துபோன போட்டியாளர்கள்..!

பரபரப்புடன் சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 6 தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

90 நாட்களை கடந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் தற்போதைய சீசன் 6 ஃபைனலை நெருங்கியுள்ளது. கடந்த வாரம் வழக்கம்போல போட்டியில் கமல் தோன்றி இருந்தார். அப்போது கடந்த வாரம் நடந்தவை குறித்து கமல் பேசியிருந்தார். அப்போது எவிக்ஷன் நேரத்தில் ADK வெளியேறுவதாக அறிவித்தார் கமல். இதனால் போட்டியாளர்கள் அனைவரும் சோகமடைந்தனர். அதன்பிறகு, ADK -விற்கு தொப்பி ஒன்றையும் கமல் பரிசாக அளித்திருந்தார்.

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா,  நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர். இதனால் பிக்பாஸ் வீடு சுவாரஸ்யமாக மாறியுள்ளது. இது ஒருபக்கம் இருக்க, அவ்வப்போது போட்டியாளர்களிடையே வாக்குவாதங்களும் ஏற்பட்டு வந்தன.

இந்த சூழ்நிலையில் வீட்டுக்குள் பண மூட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. ஃபைனலிஸ்ட் போட்டியாளர்களில் யார் வேண்டுமானாலும் பண மூட்டையை எடுத்துக்கொண்டு வெளியேறலாம் என பிக்பாஸ் அறிவித்திருந்தார். பின்னர் கதிர் பண மூட்டையுடன் வெளியேறுவதாக அறிவித்து அனைவர்க்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த சூழ்நிலையில் தற்போது மீண்டும் பணப் பெட்டி அறிமுகமாகியுள்ளது. ஃபைனலிஸ்ட் போட்டியாளர்களில் யார் வேண்டுமானாலும் பணத்துடன் வெளியேறலாம் என இப்போதும் பிக்பாஸ் அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், அமுதவாணன் பிக்பாஸ் வீட்டுக்குள் கலந்துகொண்ட டாஸ்க்குகள் பற்றிய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

அதனை ஆச்சர்யத்துடன் அமுதவாணன் சுற்றிப் பார்க்கிறார். அப்போது பேசும் பிக்பாஸ்,”இந்த வீட்ல நீங்க வாழ்ந்த நாட்கள், செஞ்ச டாஸ்க் இதோட நினைவுகளா பொருட்கள் வைக்கப்பட்டிருக்கு. உங்க மனசுல வேணும்னா நீங்க ஒரு காமெடியன் தானேன்னு நெனச்சிருக்கலாம். என்னை பொறுத்தவரைக்கும் என் அமுது ஒரு முழு கலைஞன்” என்கிறார். இதனை கண்கலங்கியபடி கேட்டுக்கொண்டிருக்கும் அமுது நன்றி பிக்பாஸ் என கைகூப்பியபடி சொல்கிறார். இதனை போட்டியாளர்கள் அனைவரும் நெகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.