பனாரஸ் – விமர்சனம்

கன்னடத்தில் தயாராகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக வெளிவந்துள்ள படம்.

காதலையும், அறிவியலையும் கலந்து ஒரு ‘சயின்ஸ் லவ்’ படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜெயதீர்த்தா. ‘மாநாடு’ படத்தில் நாம் பார்த்து ரசித்த ‘டைம் லூப்’ விஷயத்தை இந்தப் படத்தில் காதலுக்காகப் பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

ஜயித் கான் ஒரு பணக்கார வீட்டுப் பையன். கல்லூரியில் படித்து வருகிறார். நண்பர்களுடன் சவால் விட்டு டிவி ஷோக்களில் பிரபலமான சோனல் மோன்டிரோ-விடம் ‘டைம் மிஷின்’ மூலமாக எதிர்காலத்திலிருந்து வருகிறேன் என நம்பும்படி பொய் சொல்கிறார். சோனல் வீட்டு பெட் ரூமிற்குச் சென்று ஒரு செல்பி எடுத்து நண்பர்களுடன் போட்ட சவாலில் வெல்கிறார். அந்த செல்பி வைரலானதால் சோனல் அவமானத்தை சந்திக்கிறார். பெற்றோர் இல்லாத சோனல், பனாரஸில் இருக்கும் சித்தப்பா வீட்டிற்குச் செல்கிறார். அவரைத் தேடி பனாரஸ் சென்று மன்னிப்பு கேட்க அலைகிறார் ஜயித் கான். ஜயித்தின் மன்னிப்பை சோனல் ஏற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இடைவேளைக்குப் பின் ஜயித் கான் டைம் லூப்பில் சிக்கிக் கொள்கிறார். அவர் ஏன் டைம் லூப்பில் மாட்டிக் கொள்கிறார், அதற்கான காரணம் என்ன என்பதுதான் இரண்டாம் பாதியில் மெயின் கதையாக நகர்கிறது. இடையிடையே ஜயித், சோனல் காதலும் உண்டு.

அறிமுக நடிகர் போல இல்லாமல் தனது கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கிறார் ஜயித் கான். சோனலுக்கு தன்னால் அவமானம் நேர்ந்துவிட்டதை பின்னர் உணர்ந்து அவரைச் சந்தித்து மன்னிப்பு கேட்க அலையோ அலை என அலைகிறார். லவ், எமோஷனல் கலந்த காட்சிகளில் புதுமுகம் என்று தெரியாதபடி நடித்திருக்கிறார்.

காதல் படங்கள் என்றால் நாயகனும், நாயகியும் பொருத்தமான ஜோடியாக இருக்க வேண்டும். இந்தப் படத்தில் ஜயித், சோனல் பொருத்தமான ஜோடியாக இருக்கிறார்கள். தனக்கு அவமானம் ஏற்படுத்திய ஜயித்தை ஆரம்பித்திலிருந்தே மன்னிக்காமல் விரட்டிக் கொண்டே வருகிறார் சோனல். பெற்றோர் இல்லாமல் சித்தப்பா ஆதரவில் இருக்கும் சோனல் மீது நமக்கு அனுதாபம் ஏற்படும் அளவுக்கு இருக்கிறது அவரது நடிப்பு. கிளாமர் காட்டாத குடும்பப் பாங்கான நாயகியாக நடித்திருக்கிறார்.

ஜயித் அப்பாவாக தேவராஜ், சோனல் சித்தப்பாவாக அச்யுத் குமார், சித்தியாக ஸ்வப்னா ராஜ் நடித்திருக்கிறார்கள். ஜயித் நண்பராக சுஜய் சாஸ்திரி கொஞ்சம் நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

காசியில் பெரும்பாலும் படமாக்கப்பட்டுள்ள படம். காசி தெருக்களில், கங்கை நதி ஓரத்தில் நாமும் பயணித்தது போல ஒரு உணர்வை ஒளிப்பதிவாளர் அத்வைத குருமூர்த்தி அளித்திருக்கிறார். அஜனீஷ் லோகத்நாத் இசையில் ஒரு சில பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.

படம் ஆரம்பம் முதலே மெதுவாக நகர்கிறது. டைம் லூப் காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன. காதல் படத்தில் எதற்கு டைம் லூப் என்றும் கேள்வி எழுகிறது. அச்யுத் குமாரின் ஆராய்ச்சி, சோனலை அவமானப்படுத்தியதால் ஒரு பழி வாங்கல் என அதற்கு விளக்கம் கொடுக்கிறார் இயக்குனர். படத்தின் நீளத்தைக் குறைத்து, காட்சிகளை விறுவிறுப்பாக்கி இருந்தால் ரசித்திருக்கலாம்.