காந்தாரா – விமர்சனம்

‘கேஜிஎப்’ படங்களுக்குப் பிறகு கன்னட சினிமா மீதான பார்வை முற்றிலும் மாறிவிட்டது. அங்கும் தரமான இயக்குனர்கள், நடிகர்கள் இருக்கிறார்கள் என்பதை கன்னடத் திரையுலகத்தைச் சேர்ந்த சில திறமைசாலிகள் நிரூபிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

‘கேஜிஎப் 2’ படத்திற்குப் பிறகு வந்த ‘777 சார்லி’, இப்போது வந்துள்ள ‘காந்தாரா’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வரவேற்பையும் வெற்றியையும் கர்நாடகாவில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவு பெற்று வருகின்றனது.

ரிஷாப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளிவந்து கன்னட ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படமான ‘காந்தாரா’ தமிழிலும் டப்பிங் ஆகி இன்று(அக்., 15) வெளியாகி உள்ளது.

18ம் நூற்றாண்டின் இறுதியில் கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஆண்ட ஒரு அரசன் நிம்மதி இழந்து தவிக்கிறார். நிம்மதியைத் தேடிப் புறப்படுபவர் மலை கிராமப் பகுதி ஒன்றில் மக்கள் வழிபடும் கற் சிலை ஒன்றைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைகிறார். அந்தக் கற் சிலையை தனக்குத் தரும்படி கேட்கிறார். சாமியாடியாக இருக்கும் அந்த கிராமத்துவாசி ஒருவர் சத்தமாகக் கத்தி, அந்த கத்தல் ஒலி கேட்டது வரையிலான அரசரின் நிலங்களை கிராமத்து மக்களுக்குத் தந்தால் கற் சிலையை எடுத்துக் கொண்டு போகலாம் என்கிறார். அரசரும் அதற்கு சம்மதித்து அந்த கிராமத்து மக்களுக்கு தனக்குச் சொந்தமான நிலங்களைத் தந்து கற் சிலை கடவுளை தன் நாட்டிற்கு எடுத்துச் செல்கிறார்.

பல வருடங்களுக்குப் பிறகு 1970ல் அந்த அரசரின் வாரிசுகள் தங்களது முன்னோர் கொடுத்த அந்த நிலத்தை மீண்டும் கிராமத்து மக்களிடம் இருந்த பெற முயற்சிக்கிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார் ஒரு வாரிசு. ஆனால், அவர் நீதிமன்ற வாசலில் ரத்தம் கக்கி சாகிறார். பிறகு 1990ல் மற்றொரு வாரிசும், அந்த கிராமத்து மக்களும் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறார்கள். அரசரின் வாரிசான அச்யுத் குமார் மக்களுக்கு நல்லவர் போல நடித்தாலும், அந்த நிலங்களை மீண்டும் எப்படியாவது கைப்பற்றும் திட்டத்தில் இருக்கிறார். ஒரு கட்டத்தில் அச்யுத் திட்டம் பற்றி அறிந்து கொண்டு நாயகன் அந்த மண்ணின் மைந்தன் ரிஷாப் ஷெட்டி, தனது மலை கிராம மக்களையும், தனது மண்ணையும் காப்பாற்ற முயற்சிக்கிறார். பின்னர் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கடற்கரை கர்நாடகா பகுதி, உடுப்பி பக்கம் உள்ள மலை கிராம மக்களின் வாழ்க்கை முறை, அவர்கள் வணங்கும் கற் சிலை தெய்வம், கோலா திருவிழா, கம்பளா ரேஸ் என அந்தப் பகுதிக்கே நம்மை அழைத்தச் சென்றது போல அவ்வளவு இயல்பாய் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ரிஷாப் ஷெட்டி. அவருக்கு பக்கபலமாக ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ் காஷ்யப், இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத், படத் தொகுப்பாளர் பிரகாஷ், பிரதீக் ஷெட்டி, அரங்க அமைப்பாளர் தரணி கங்கே புத்ரா, ஆடை வடிவமைப்பாளர் பிரகதி ரிஷாப் ஷெட்டி என மற்ற கலைஞர்களும் 30 வருடங்களுக்கு முந்தைய வாழ்க்கையை அப்படியே காட்ட உழைத்திருக்கிறார்கள்.

மலை கிராமத்தில் அடிக்கடி குடித்துக் கொண்டு, புகைத்துக் கொண்டு, நண்பர்களுடன் சுற்றித் திரியும், காட்டுக்கு பன்றி வேட்டையாடப் போகும் இளைஞன் சிவா கதாபாத்திரத்தில் ரிஷாப் ஷெட்டி. நேரில் பார்ப்பதற்கும் படத்தில் அந்த சிவா கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கும் அவ்வளவு வித்தியாசம். மற்றவர்களை மிரட்டும், விரட்டும் இளைஞனாக இருந்தாலும் அம்மாவின் கோபத்தைக் கண்டு பயந்து தெறித்து ஓடுவது, காதலி சப்தமி கவுடாவிடம் காதல் குறும்பைக் காட்டுவது, காட்டிலாகா காவல் அதிகாரி கிஷோருடன் முறைத்துக் கொண்டு நிற்பது, அரச வாரிசு அச்யுத் குமாரிடம் பணிவுடன் நடந்து கொள்வது, அடிக்கடி கனவில் வரும் உருவத்தைப் பார்த்து மிரள்வது என படம் முழுவதும் அவரது விதவிதமான நடிப்பைப் பார்க்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக கிளைமாக்சில் திருவிழாவின் போது அவர் எடுக்கும் அவதாரம் நம்மை மிரட்சி கொள்ள வைக்கிறது. தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும் கன்னட கதாநாயகன் வரிசையில் ரிஷாப்பும் இணைந்துவிட்டார்.

படத்தில் கதாநாயகனுக்கு ஒரு ஜோடி இருக்க வேண்டும் என்பதற்காகவே சப்தமி கவுடா கதாபாத்திரம். ஒரு சில காட்சிகளில் அவரைக் கொஞ்சம் கிளாமர் கோணங்களில் காட்டி இருக்கிறார்கள். இருவருக்குமான நெருக்கமான காதல் காட்சிகள் படத்தில் இல்லையென்றாலும் பாதகமாய் அமைந்திருக்காது.

கதாநாயகனுக்கு அடுத்து காட்டிலாகா காவல் அதிகாரி கிஷோர் கதாபாத்திரம் அவ்வளவு மிடுக்காய் அமைக்கப்பட்டுள்ளது. நாம் பார்த்து கேட்டு ரசித்த அவருடைய சொந்த குரலில் அவரை டப்பிங் பேச வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். இவர்தான் படத்தின் வில்லன் என்று எதிர்பார்த்தால் கிளைமாக்சில் டுவிஸ்ட் வைத்து விடுகிறார்கள். ‘கேஜிஎப் 2’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு அசால்ட்டான வில்லனாக அச்யுத் குமார். அரசரின் வாரிசு எவ்வளவு நல்லவர் என ஊரே மெச்சும் போது கடைசியில் அவருடைய திட்டம் தெரிந்ததும் மக்கள் பொங்கி எழுகிறார்கள். உட்கார்ந்த இடத்திலிருந்தே துப்பாக்கியில் சுட்டுத் தள்ளுவதெல்லாம் வேறு மாதிரியான வில்லத்தனம். ரிஷாப்பின் அம்மா, நண்பர்கள் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் அவ்வப்போது கலகலப்பூட்டுகிறார்கள்.

இடைவேளைக்குப் பின் ரிஷாப் சிறைக்குச் சென்றதும் கதையின் ஓட்டம் கொஞ்சம் தடைபடுகிறது. அதற்குப் பிறகு கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க வேறு விதமாக மாறுகிறது. அந்த இருபது நிமிடக் காட்சிகளில் ரிஷாப்பின் நடிப்பு உச்சத்தைத் தொடுகிறது.

பார்க்காத கதைகள், அதிக ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பு, எதிர்பார்க்க முடியாத திருப்பங்கள் என ஒரு படம் அமையும் போது அது மொழிகளைக் கடந்து, பழக்க, வழக்கங்களைக் கடந்து ரசிக்க வைக்கும். அதற்கு இந்த ‘காந்தாரா’ ஒரு சிறந்த உதாரணமாய் எதிர்காலத்தில் அமையும்.