சஞ்ஜீவன் – விமர்சனம்

ஸ்நூக்கர் விளையாட்டை மையமாகக் கொண்டு வரும் தென்னிந்தியாவின் முதல் படம் என வெளீட்டிற்கு முன்பாக இந்தப் படத்தை விளம்பரப்படுத்தி வந்தார்கள். ஒரு முழு படத்தையும் அப்படித்தான் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தால் இடைவேளை வரை மட்டுமே ஸ்நூக்கர் பற்றிய ஒரு படம். இடைவேளைக்குப் பின் முதல் பாதிக்கு சம்பந்தம் இல்லாத வகையில் இரண்டாம் பாதி நகர்ந்து சட்டென முடிந்து போகிறது.

இடைவேளை வரை படத்தை கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் மணி சேகர். இடைவேளைக்குப் பின் எதற்காக வேறு எதையோ சொல்லி படத்தை முடித்திருக்கிறார் என்பது அவருக்கே தெரிந்த ஒன்று. இப்படி, முதல் பாதிக்கு தொடர்பு இல்லாத இரண்டாம் பாதியை இதுவரையில் பார்த்ததே இல்லை.

வினோத் லோகிதாஸ், சத்யா, ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, யாசீன் ஆகிய நால்வரும் நெருங்கிய நண்பர்கள். வினோத் ஸ்நூக்கர் விளையாட்டில் திறமைசாலி. ஒரு போட்டியில் இறுதிக் கட்டம் வரை சென்று வெற்றி பெறுகிறார். அந்த வெற்றியைக் கொண்டாட நண்பர்கள் நால்வரும் சேர்ந்து ஏற்காடு செல்கிறார்கள். அப்போது என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இடைவேளை விரை வினோத் உள்ளிட்ட நண்பர்களின் நட்பு, கேலி, கிண்டல், சிறு சிறு மோதல், அவர்களுக்குள் இருக்கும் காதல் ஆகியவற்றுடன் ஸ்நூக்கர் போட்டியில் வினோத் கலந்து கொள்வது தோற்பது, வெற்றி பெறுவது என இன்றைய இளம் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் அளவிற்கு ஒரு ஈடுபாட்டுடன் கூடிய மேக்கிங்கைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். இரண்டாவது பாதியில் அதைப் போலவே, அதன் தொடர்புடைய காட்சிகள் வரும் என்று எதிர்பார்த்து உட்கார்ந்தால் ஏமாற்றமடைய வைக்கிறார். இரண்டாம் பாதியில் ‘குடி’யால் ஏற்படும் பாதிப்பு தான் காட்சிகள் என்றாலும் அதை அழுத்தமாக உணரும்படி கொடுத்திருந்தால் இந்தப் படம் சிறந்த படங்கள் வரிசையில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும்.

படத்தில் பலரும் அதிகம் அறிமுகமில்லாத, வளரும் நடிகர்கள். ஆனாலும், ஒவ்வொருவருமே அவ்வளவு யதார்த்தமாய் நடித்திருக்கிறார்கள். வினோத் லோகிதாஸ்தான் படத்தின் கதாநாயகன். ஸ்நூக்கர் விளையாடுவது, திவ்யா துரைசாமியைக் காதலிப்பது, நண்பர்களுக்குள் அடிக்கடி சமாதானம் செய்வது என மெச்சூர்டாக நடித்திருக்கிறார். நண்பர்கள் அனைவருமே விமல் ராஜா அப்பாவின் கம்பெனியில்தான் வேலை பார்க்கிறார்கள். விமல், நெருங்கிய நண்பனாக இருந்தாலும் அவ்வப்போது அந்த பணக்காரத் திமிரைக் காட்டுகிறார். அதுதான் இரண்டாம் பாதிக்கான திருப்புமுனையாக அமைகிறது. ஷிவ் நிஷாந்த், சத்யா, யாசீன் ஆகிய மூவர் கூட்டணிதான் படத்தின் கலகலப்புக்குக் காரணமானவர்கள். நமது நட்பு வட்டத்தில் உள்ளவர்களைப் போலவே அவர்களும் நடந்து கொள்வதால் ரசிக்க வைக்கிறார்கள்.

படத்தின் கதாநாயகியாக திவ்யா துரைசாமி. வினோத்தைப் பார்த்த முதல் பார்வையிலேயே காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். வினோத்திற்கும் அப்படியேதான். சில காதல் காட்சிகளுடன் திவ்யாவின் வேலை முடிந்து போகிறது. “முதல் முறையில் புடவையில் பார்க்கும் போது அவ்ளோ அழகா இருக்கே,” என இந்த க்ளிஷேவான காட்சி, டயலாக்கை இன்னும் எத்தனை படங்களில் பார்ப்பதோ ?.

படத்தின் உருவாக்கத் தரத்திற்கு ஒளிப்பதிவாளர் கார்த்திக் ஸ்வர்ணகுமார், எடிட்டர் ஷிபு நீல், இசையமைப்பாளர் தனுஷ் மேனன் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.

வித்தியாசமாகக் கொடுக்க நினைத்தாலும் முதல் பாதிக்குத் தொடர்புடன்தான் இரண்டாம் பாதி வர வேண்டும் என்ற சினிமா இலக்கணத்துடன் இந்தப் படம் அமைந்திருந்தால் ‘ஜீவன்’ ஆக இருந்திருக்கும்