ஜீவி – 2 – விமர்சனம்

2019ம் ஆண்டு வெளிவந்த ‘ஜீவி’ படத்தின் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ‘ஜீவி 2’ படத்தைத் தயாரித்து தியேட்டர்களில் வெளியிடாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

முதல் பாகத்திற்கு அப்போது நிறைவான விமர்சனங்களும் படத்திற்குக் குறிப்பிடத்தக்க வசூலும் கிடைத்தது.

இரண்டாம் பாகத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முதல் பாகத்தை மீண்டும் ஞாபகப்படுத்திப் பார்க்க வேண்டும்.

அப்போது தான் இரண்டாம் பாகம் புரியும். அதனால், முதல் பாகத்திற்கு அப்போது நாம் எழுதிய ‘ஜீவி’ முதல் பாகம் பற்றிய கதைச்சுருக்கம் கீழே.

‘தொடர்பியல்’ என்பதுதான் இந்தப் படத்தின் மையப் புள்ளி. நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஏதோ ஒரு விதத்தில் வேறு ஒரு தொடர்பு இருக்கும் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

ஊரை விட்டு வந்து சென்னையில் அறை எடுத்துத் தங்கி வேலை செய்கிறார் வெற்றி. அவருடன் அறையிலும், வேலையிலும் ஒன்றாக இருப்பவர் கருணாகரன்.

காதலிக்கும் பெண் பணம்தான் பெரிது என விட்டுப் பிரிந்ததால் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கிறார் வெற்றி. அதற்கு அவர் தேர்ந்தெடுப்பது திருட்டு.

அவர்கள் வீட்டு ஓனரான ரோகிணி, அவர் மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகைகளைத் திருட திட்டமிட்டு அதைச் செய்தும் விடுகிறார்கள். போலீசிடம் மாட்டாமல் இருக்க ஏற்கெனவே பல வேலைகளைச் செய்துள்ளார் வெற்றி.

இருப்பினும் ஒரு கட்டத்தில் திருடிய நகைகளை திருப்பிக் கொடுக்கலாமா என யோசிக்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

முதல் பாகத்தில் இருக்கும் அந்தத் தொடர்பியல் காரணமாக வேறு ஏதும் நடக்கக் கூடாது என்பதற்காக தனது வீட்டு ஓனரான ரோகிணி மகள் அஷ்வினியைத் திருமணம் செய்து கொள்கிறார் வெற்றி. பிரிந்து போன நண்பன் கருணாகரன் மீண்டும் வெற்றியுடன் சேர்கிறார்.

வெற்றி ஷேர் ஆட்டோ ஓட்ட ஆரம்பிக்கிறார். நண்பன் கருணாகரனுக்கு டீ கடை வைத்துத் தருகிறார் வெற்றி. இவர்களுடன் பணக்கார இளைஞனான முபாஷிர் பழக ஆரம்பிக்கிறார். அடிக்கடி ஒன்றாக சேர்ந்து குடிக்கிறார்கள்.

கண் பார்வை இல்லாத தனது மனைவிக்குக் கண் பார்வை கிடைக்க முயற்சிக்கிறார் வெற்றி. அவருக்கு மேலும் சில பணத் தேவைகள் ஏற்படுகிறது. அதனால் நண்பன் முபாஷிர் வீட்டிலேயே நகைகளைத் திருடுகிறார் வெற்றி.

மறுநாள் முபாஷிர் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார் என போலீஸ் சந்தேகத்தின் பேரில் வெற்றி, கருணாகரனை அழைத்துச் செல்கிறது. முபாஷிரைக் கொன்றது யார், திருடிய நகைகளை வெற்றி என்ன செய்தார் ? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இரண்டாம் பாகம் ஆரம்பிப்பதற்கு முன்பாக முதல் பாகம் பற்றிய சில காட்சிகளைக் காட்டிவிட்டு, கதையை ஆரம்பிக்கிறார்கள்.

முதல் பாகம் போலவே அடுத்து என்ன என்ற பரபரப்பை இந்த இரண்டாம் பாகமும் கொடுக்கும் என்று எதிர்பார்த்து உட்கார்ந்தால் சற்றே ஏமாற்றம் தான்.

முதல் பாகம் அளவிற்கு இரண்டாம் பாகம் இல்லை. இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு கதையை அவசர கதியில் எழுதி படமெடுத்தது போல இருக்கிறது.

மனைவி அஷ்வினி மீது அதிக பாசம் கொண்டவராகவும், நண்பன் கருணாகரன் மீது அதிக நட்புள்ளவராகவும் வெற்றி. அதே சமயம் தங்களுடன் நட்பாகப் பழகிய முபாஷிர் வீட்டிலேயே திருட முடிவெடுக்கிறார்கள் என்பது நெருடல்.

முதல் பாகம் படம் வெற்றி மனதிலும், கருணாகரன் மனதிலும் ஆழமாகப் பதிந்துள்ளது போலிருக்கிறது. அதே நடிப்பை இந்தப் படத்திலும் அழுத்தம் திருத்தமாகத் தொடர்ந்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் கூடுதலாக முபாஷிர் கதாபாத்திரம் இணைந்துள்ளது.

பணக்கார நண்பன் எப்படி இருப்பாரோ அதை அப்படியே காட்டியிருக்கிறார். முதல் பாகத்தில் நடித்த ரோகிணி, மைம் கோபி ஆகியோருக்கு இந்த இரண்டாம் பாகத்தில் முக்கியத்துவம் உண்டு. இன்ஸ்பெக்டராக ஜவஹர் (நடிகர் நாசரின் தம்பி).

உயரம் குறைவான ஒருவர் எப்படி போலீசில் சேர முடியும் எனத் தெரியவில்லை. ஆனாலும், தனது நடிப்பால் அக்கதாபாத்திரத்தைப் பேச வைத்திருக்கிறார் ஜவஹர். உடல் மொழிகளில் நாசர் தான் தெரிகிறார்.

தொடர்பியல் என்பது முதல் பாகத்தில் அதன் போக்கிலேயே போகும். அதைச் சுற்றி திரைக்கதை அமைத்தது போல இருக்கும்.

ஆனால், இந்த இரண்டாம் பாகத்தில் தொடர்பியலைக் காட்ட வேண்டும் என்பதற்காக திரைக்கதையை எங்கெங்கோ அலைய விட்டிருக்கிறார்கள்.

முதல் பாகம் போல இன்னும் சிறப்பாக எழுதியிருந்தால் இரண்டாம் பாகமும் பேசப்பட்டிருக்கும். இதில் முக்கோண விதி என்பதை சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் முயற்சித்திருக்கலாம்.

ஜீவி 2 – இரண்டாம் விதியில் இறக்கம்