போத்தனூர் தபால் நிலையம் – விமர்சனம்

கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்று போத்தனூர். கேரளாவுக்குச் செல்லும் சில ரயில்கள் கோயம்புத்தூர் செல்லாமல் போத்தனூர் வழியாகச் சென்றுவிடும். கோவை, கேரளா மக்களுக்கு போத்தனூர் நன்றாகத் தெரிந்த ஒரு ஊர்.

அப்படிப்பட்ட போத்தனூர் தபால் நிலையத்தில் 1990களில் நடக்கும் ஒரு பணத் திருட்டு சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் பிரவீண். இவரது அப்பா அந்த தபால் நிலையத்தில் வேலை செய்துள்ளாராம். அந்த கால கட்டத்தில் அவரை பாதித்த ஒரு விஷயத்தை வைத்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் போலிருக்கிறது.

இரண்டே நாளில் நடக்கும் ஒரு கதை. படத்தின் நாயகன் பிரவீணின் அப்பா போத்தனூர் தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டர் ஆக வேலை செய்கிறார். ஒரு வெள்ளிக்கிழமையில் தபால் நிலையத்தில் டெபாசிட் ஆக வந்த பணம், ஏற்கெனவே இருக்கும் பணம் என ஆறு லட்ச ரூபாயை வங்கியில் செலுத்தாமல் விட்டுவிடுகிறார் கேஷியர். அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் தபால் நிலையத்தில் அப்பணம் இருந்தால் பாதுகாப்பில்லை எனக் கருதும் போஸ்ட் மாஸ்டர் அப்பணத்தை தன் வீட்டிற்குக் கொண்டு செல்கிறார். கொண்டு செல்லும் வழியில் அந்தப் பணத்தை யாரோ திருடிவிடுகிறார்கள். திங்கள் கிழமை காலைக்குள் அந்தப் பணத்தை தபால்நிலையத்தில் வைக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் போஸ்ட் மாஸ்டரின் மகனான பிரவீண் தனது காதலி அஞ்சலி ராவ், நண்பன் வெங்கட் சுந்தர் ஆகியோருடு சேர்ந்து திருடப்பட்ட பணத்தைக் கண்டுபிடிக்க முயல்கிறார். அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் கதைக்களம், படமாக்கப்பட்ட விதம், அந்த 90களின் காலகட்டம், அதிகம் பரிச்சயமில்லாத நடிகர்கள், நடிகைகள் இவை அனைத்தும் தான் இந்தப் படத்தின் பிளஸ் பாயின்ட். இந்த மாதிரியான த்ரில்லர் படங்களில் கொஞ்சம் நகைச்சுவையையும் கூடுதலாகச் சேர்த்திருக்கலாம். அல்லது, த்ரில்லரையும் இன்னும் பரபரப்பாகக் கூட்டியிருக்கலாம். அப்படி செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். டிராமா பாணியில் சொல்லப்பட்ட, ஒரு நீட்டிக்கப்பட்ட குறும்படம் பார்க்கும் உணர்வே இப்படத்தைப் பார்க்கும் போது வருகிறது.

படத்தை இயக்கி, நாயகனாகவும் நடித்திருக்கிறார் பிரவீண். அந்தக் காலத்திலேயே கம்ப்யூட்டர்தான் எதிர்காலம் எனப் புரிந்து கொண்டு அது பற்றிய சொந்தத் தொழிலில் இறங்க முயற்சிக்கிறார். வங்கிக்கடன் கிடைக்காமல் ஏமாற்றமடைகிறார். நடிப்பில் புதுமுகம் என்று சொல்ல முடியாதபடி யதார்த்தமாக நடித்திருக்கிறார். ஆனால், வார்த்தை உச்சரிப்பில்தான் அழுத்தம் திருத்தமாக இல்லை. அவர் பேசும் சில வசனங்களைப் புரிந்து கொள்ள சிரமமாக உள்ளது. நடிப்பின் ஒரு அங்கம் வசன உச்சரிப்பு என்பதையும் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரவீண் காதலியாக அஞ்சலி ராவ். ஒரு யதார்த்தமான தோற்றம் கொண்ட கதாநாயகி. காதலனுக்காக எப்போதும் கூடவே இருக்கும் ஒரு கதாபாத்திரம். பிரவீண் நண்பனாக வெங்கட் சுந்தர். இவரது கதாபாத்திரத்தில் இன்னும் நிறைய நகைச்சுவையைச் சேர்த்திருக்கும் வாய்ப்பிருந்தும் அதைச் செய்யாமல் விட்டிருக்கிறார்கள்.

பிரவீண் அப்பாவாக நடித்திருக்கும் ஜெகன் கிரிஷ், தபால் நிலையத்தின் கேஷியர் சீதாராமன், மற்ற பணியாளர்கள், பிரவீண் அம்மா, தங்கை என படத்தில் நடித்திருக்கும் ஏனைய கதாபாத்திரத் தேர்வு கூட மிகச் சரியாக அமைந்துள்ளது.

90களின் காலகட்டத்தை கண்முன் நிறுத்தியதற்காக ஒளிப்பதிவாளர் சுகுமாரன் சுந்தர், கலை இயக்குனர் ஆகியோரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

கதாபாத்திர அமைப்பு, கதைத் தேர்வு, கதைப் பின்னணி ஆகியவற்றில் காட்டிய அக்கறையை திரைக்கதையில் காட்டியிருந்தால் இந்தத் தபால் நிலையம் தரமான நிலையமாக ஆகியிருக்கும்.