ரங்கா – விமர்சனம்

ஒரு படத்திற்கு கதையும், திரைக்கதையும் எவ்வளவு அவசியம் என்பதை சில படங்கள் நமக்கும் உணர்த்தும். அப்படி உணர்த்தியுள்ள மற்றுமொரு படம்தான் இந்த ‘ரங்கா’.

‘பீச்சாங்கை’ என்ற ஒரு படம் சில வருடங்களுக்கு முன்பு வந்தது. கதாநாயகனின் இடது கை அவனது மூளையின் உத்தரவு இல்லாமல் தன்னிச்சையாக செயல்படும். அதை இந்த ‘ரங்கா’ படத்தின் கதாநாயகனுக்கு வலது கை என மாற்றிவிட்டார்கள். இந்த ஒரு விஷயத்தை மட்டும் வித்தியாசம் என நினைத்து ஒரு படத்தையே தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள்.

சாப்ட்வேர் இஞ்சினியரான சிபிராஜுக்கு வலது கையில் ‘ஸ்மைலி பால்’ இருந்தால் மட்டுமே அந்தக் கை அவரது மூளைக்குக் கட்டுப்பட்டு இருக்கும். அந்த பால் இல்லையென்றால் அந்தக் கை என்ன வேண்டுமானாலும் தானாகவே செய்யும். இப்படிப்பட்டவர் அவரது சிறு வயது தோழி நிகிலா விமலைக் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப் பின்பு தேன்நிலவுக்காக மனாலி செல்கிறார். அங்கு அவர்கள் தங்கும் ஹோட்டல் அறையில் ரகசிய கேமராக்களை வைத்து ஜோடிகளின் அந்தரங்க விஷயங்களை படமெடுப்பதை சிபிராஜ் கண்டுபிடிக்கிறார். அதனால், வில்லன் அவரைத் துரத்த சிபி, தன் மனைவி நிகிலாவுடன் தப்பித்தாரா இல்லையா என்பதுதான் மீதிக் கதை.

சிபிக்கும், நிகிலாவுக்கும் நடிப்பதற்கெல்லாம் பெரிய ஸ்கோப் உள்ள காட்சிகள் என்று எதுவுமில்லை. வில்லன் கூட்டத்திடம் சிக்கிய பிறகு பயந்து தப்பிக்கும் போது மட்டுமே கொஞ்சம் கொஞ்சம் நடிக்கிறார்கள். ஆறடி உயரம் இருக்கும் சிபி, வில்லன்களை துணிச்சலுடன் எதிர்த்து நின்று போராடுவதை விட்டுவிட்டு பயந்து கொண்டு ஓடுவதெல்லாம் என்ன ஹீரோயிசம் எனத் தெரியவில்லை. கிளைமாக்சில் எதிர்த்து நிற்பவர் அதை ஆரம்பித்திலேயே செய்திருக்கலாமே என சாதாரண ரசிகனும் கேள்வி எழுப்புவான்.

வில்லனாக மோனிஷ் ரஹேகா. சிபியைத் துரத்துவது மட்டும்தான் அவருக்கு வேலை. சிபியின் நண்பனாக சதீஷ், ஒரு சில காட்சிகளுடன் போய்விடுவதால் தப்பித்தோம்.

மனாலியில்தான் பெரும்பாலான காட்சிகள் நகர்கிறது. சில காட்சிகளை ஒரிஜனலாகவும் பல காட்சிகளை கிரீன் மேட்டிலும் எடுத்திருப்பது நன்றாகவே தெரிகிறது. படத்தில் எதைப் பாராட்டுவது என்று எவ்வளவு யோசித்தாலும் எதுவுமே வரவில்லை. அடுத்த படத்திலாவது நல்ல கதை, காட்சிகளுடன் முயற்சி செய்யுங்கள் இயக்குனரே.