சல்யூட் (மலையாளம்) – விமர்சனம்

துல்கர் சல்மான் முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் படம்.

மும்பை போலீஸ் என்கிற படத்தை தொடர்ந்து ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியிருக்கும் போலீஸ் படம் என எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள இந்த சல்யூட், அந்த எதிர்பார்ப்பை ஈடுகட்டி இருக்கிறதா ? பார்க்கலாம்.

அண்ணன் மனோஜ் கே.ஜெயன் போலீஸ் டிஎஸ்பி. அவரது கீழ் வேலை பார்ப்பவர் எஸ்ஐயான தம்பி துல்கர் சல்மான். அரசியல்ரீதியான செல்வாக்குள்ள நபர் ஒருவர் அவரது மனைவியுடன் சேர்த்து கொலை செய்யப்படுகிறார்.

கொலையாளியை விரைவாக கண்டுபிடிக்க சொல்லி அரசியல் கட்சியிடமிருந்தும் உயர் அதிகாரிகளிடம் இருந்தும் மனோஜ் கே.ஜெயனுக்கு பிரஷர் கொடுக்கப்படுகிறது.

குற்றவாளியை பற்றி தடயம் கிடைக்காத நிலையில் இறந்து போனவரிடம் தனது தங்கையின் திருமணத்திற்காக பணம் கேட்டு இல்லை என மறுக்கப்பட்ட வினோத் சாகர் என்பவர்

இந்த கொலையை செய்திருக்கலாம் என அவருக்கு எதிரான ஆதாரங்களை ஜோடித்து அவரை சிறையில் தள்ளி வழக்கை முடிக்கின்றனர்

காவல்துறையில் நேர்மையாக இருக்க வேண்டும், ஏதாவது சாதிக்க வேண்டும் என பணியில் சேர்ந்த

துல்கர் சல்மானுக்கு போலீஸ் அதிகாரியான தன் அண்ணனே இப்படி உண்மைக்கு மாறாக ஒரு நிரபராதிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தது மனதை உறுத்துகிறது.

இதனால் அந்த வழக்கில் உண்மையான குற்றவாளி யாரென கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் துல்கர் சல்மான்.

தாங்கள் முடித்து வைத்த ஒரு கேஸை தேவையில்லாமல் தோண்டி தனக்கும் சேர்த்து சிக்கலை கொண்டுவந்து விடுவார் என்கிற எண்ணத்தில் அவரது அண்ணன் தனது செல்வாக்கை பயன்படுத்தி பலவிதமான முட்டுக்கட்டைகளை போடுகிறார்

அதையும் மீறி துல்கர் சல்மான் இறுதியாக நிஜமான குற்றவாளியை நெருங்கும் வேளையில் துல்கர் சல்மானுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி தகவல் ஒன்று கிடைக்கிறது.

அது என்ன தகவல் ? அந்த மர்ம நபரை துல்கர் சல்மான் பிடித்தாரா ? உண்மை குற்றவாளியை கண்டுபிடித்ததன் மூலம் தனக்கும் தன தன் அண்ணனுக்கும் சேர்த்து சிக்கலை இழுத்துக் கொண்டாரா ? என்பது கிளைமாக்ஸ்

இதுவரை நாம் பார்த்த படங்களில் போலீசாரின் அத்துமீறல் என்பது செல்வாக்கான ஒரு குற்றவாளியை காப்பாற்றுவதற்காக பணம் வாங்கிக் கொண்டோ அல்லது

மேலிடத்து பிரஷர் காரணமாகவோ அப்பாவியான ஒரு நபரை அவருக்கு பதிலாக பலி கொடுப்பார்கள்.

ஆனால் இந்த படத்தில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல்,

அதேசமயம் தங்களது இயலாமை தெரிந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு அப்பாவியை பலியாடு ஆக்குகிறார்கள் அந்தவகையில் வழக்கத்திற்கு மாறான ஒரு ஒன்லைனைத்தான் இயக்குனர் ரோஷன் ஆன்ட்ரூஸ் தேர்ந்தெடுத்துள்ளார்

துல்கர் சல்மான் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என ஆறுச்சாமியையோ அலது துரைசிங்கத்தையோ எதிர்பார்த்து படம் பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.

அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் எதிராக அதிரடி ஆக்ஷனில் இறங்கி அடிக்காமல் ஒரு புலனாய்வு அதிகாரியாக படம் முழுவதும் அண்டர்பிளே மோடில் தன் வேலையை செய்திருக்கிறார்.

தன் அண்ணனையே தனது ரோல் மாடலாக பார்த்து வளர்ந்தவர், அவர் தவறு செய்கிறார் என தெரிந்ததும் வீட்டை விட்டு வெளியேறுவதும் அதனாலேயே தனது அண்ணன் மகள் திருமணத்தில் கூட அவர் கலந்து கொள்ளாததும் என நேர்மையில் மறு உருவமாக அவரது கதாபாத்திரம் படைப்பு கச்சிதம்.

துல்கரின் அண்ணனாக நீண்ட நாளைக்கு பிறகு புது மனோஜ் கே.ஜெயனை பார்க்க முடிகிறது.

இதற்கு முன்பு பார்த்த படங்களில் இருந்து தோற்றத்திலும் நடிப்பிலும் வித்தியாசப்பட்டு நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார் மனிதர்.

தம்பி என்றோ அவனும் ஒரு போலீஸ் அதிகாரி என்றோ பாராமல் அவரிடமும் எந்நேரமும் கறார் காட்டிக் கொண்டிருக்கும் அந்தக் கதாபாத்திரத்தில் மிகச்சரியாக பொருந்தி இருக்கிறார் மனோஜ் கே.ஜெயன்

நாயகன் சோர்ந்து போகும்போதெல்லாம் அவருக்கு தைரியம் கொடுத்து உற்சாகப்படுத்தும் வழக்கமான கதாநாயகியாக பாலிவுட்டில் இருந்து வந்துள்ள டயானா பென்ட்டி எந்த தாக்கமும் ஏற்படுத்தாமல் சாதாரணமாக கடந்து போகிறார்.

இவர்கள் தவிர படத்தில் துல்கர் சல்மானுக்கு உதவும் போலீஸ் அதிகாரிகளும் அவருக்கு எதிராக செயல்படும் போலீஸ் அதிகாரிகளும் என இரண்டு தரப்பினரும் நம்மை அவர்கள் பக்கம் எளிதாக திருப்புகின்றனர்.

துல்கர் சல்மான் ஸ்டேஷனில் இருந்து பைக்கை திருடிவிட்டார் என அவரை மடக்க முயலும் காட்சி செம.. அதேபோல பெண்களிடம் வம்பு பண்ணும் இளைஞர்களை நடுரோட்டில் வெளுக்கும்போது விசிலடிக்க வைக்கிறார்.

இதுமாதிரி இன்னும் நான்கைந்து காட்சிகளை இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் புகுத்தி இருந்தால் பக்கா கமர்ஷியலாக மாறி இருக்கும்.

கொலையாளி யார் என்கிற சஸ்பென்ஸை கடைசிவரை இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் கையாண்ட விதம் சிறப்பு.

ஆனாலும் மட்டன் பிரியாணியை எதிர்பார்த்து சென்றவர்களுக்கு வெஜிடபிள் பிரியாணியை பரிமாறி ஒரு சிறிய ஏமாற்றத்தை தந்து உள்ளார் என்பதையும் மறுப்பதற்கில்லை