வேலன் – விமர்சனம்

ஒவ்வொரு வாரமும் வெளிவரும் படங்கள் ஒரு சில படங்கள்தான் புதிய கதைகளைக் கொண்டிருக்கின்றன.

பெரும்பாலான படங்கள் பழைய கதைகளேயே, கொஞ்சம் அப்படி, இப்படி மாற்றி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில், இந்தப் படம் இரண்டாவது வகை.

வாட்சப் யுகத்தில் ஒரு காதல் கடிதத்தை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். இந்தக் காலத்தில் காதல் கடிதம் என்றால் என்ன என்று கேட்பார்கள் காதலர்கள்.

ஊரின் மதிப்புக்குரிய மனிதர் பிரபு. ஊருக்கு பள்ளி வர காரணமாக இருந்த அவரது மகன் முகேன் +2 வில் பெயிலானதால் மகனுடன் பேசுவதை நிறுத்திவிடுகிறார்.

எப்படியோ இரண்டு, மூன்று முறை தேர்வு எழுதி +2 முடித்து கல்லூரியில் சேர்கிறார் முகேன்.

அங்கே, சக மாணவி மீனாட்சி கோவிந்தராஜனைப் பார்த்ததும் காதல் கொள்கிறார். காதலை சொல்ல காதல் கடிதம் எழுதி அவர் ஊருக்குச் சென்று கொடுக்க முயல, ஒரு குழப்பத்தில் தம்பி ராமையா கையில் கிடைக்கிறது.

தன் மகளுக்குத்தான் முகேன் காதல் கடிதம் எழுதினார் என பிரபுவிடம் வந்து சண்டை போட, பிரபு திருமணத்திற்கு சம்மதிக்கிறார்.

அப்பா பேச்சைத் தட்டக் கூடாதென நினைக்கும் முகேன், மீனாட்சியுடனான காதலை முறிக்கவும் முடியாமல் தடுமாறுகிறார். அவரது காதல் என்ன ஆனது, யாருடன் திருமணம் ஆனது என்பதுதான் மீதிக் கதை.

பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னரான முகேன் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

படிப்பில் அக்கறை இல்லாமல் ஊரைச் சுற்றித் திரியும் இளைஞராக ஓரளவிற்கு நடிக்க முயற்சித்திருக்கிறார். நடிப்பில் இன்னும் பயிற்சி மேற்கொண்டால் தமிழ் சினிமாவில் இடம் பிடிக்க வாய்ப்புண்டு.

முகேன் காதலியாக மீனாட்சி கோவிந்தராஜன். படத்தில் மலையாளப் பெண் கதாபாத்திரம். கொஞ்சம் காதல், பின்னர் அழுகை என நகர்கிறது அவரது கதாபாத்திரம்.

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார்கள். முகேனின் அப்பாவாக பிரபு, அவரது நடிப்பு வழக்கம் போல். இடைவேளைக்குப் பின்தான் வருகிறார் சூரி.

ஒரு சில காட்சிகளில் நகைச்சுவை பன்ச் அடித்து சிரிக்க வைக்கிறார். தம்பி ராமையா வழக்கம் போல கத்தி கூப்பாடு போடுகிறார். தேசிய விருது வாங்கியவர் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.

வில்லனாக ஹரிஷ் பெரடி. இடைவேளை வரை கல்லூரி காட்சிகளில் வரும் ராகுல் அதன்பின் காணாமல் போகிறார்.

கோபி சுந்தர் இசையில் பாடல்கள் சுமார் ரகம். கோபி ஜெகதீஸ்வரன் பொள்ளாச்சி, பாலக்காடு பகுதிகளை அதன் பசுமையுடன் காட்டியிருக்கிறார்.

இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி அழுத்தமான காட்சிகள், விறுவிறுப்பைக் கூட்டியிருந்தால் அனைவரையும் கவர்ந்த படமாக வந்திருக்கும்.