முருங்கைக்காய் சிப்ஸ் – விமர்சனம்

0

தமிழ் திரையுலக சினிமா எத்தனையோ விதமான நல்ல கதைகளையும் பார்த்திருக்கிறது, மிகவும் மோசமான கதைகளையும் பார்த்திருக்கிறது. ஆனால் இந்தப் படத்தில் இருப்பது மோசமான கதை மட்டுமல்ல, அதில் ஆபாசமான கதையும் கூட.

இந்தக் கதையை எல்லாம் ஒரு திரைப்படமாக எடுக்கலாம் என யோசித்த இயக்குனருக்கும், இந்த திபை்படத்திற்கு பணம் முதலீடு செய்த தயாரிப்பாளருக்கும், நடிக்க சம்மதித்தவர்களுக்கும் சினிமா என்பது என்னவென்று இன்னும் புரியாமல் இருப்பது தான் மிகவும் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

நடிகர் சாந்தனு மற்றும் நடிகை அதுல்யா ரவி இருவருக்கும் திருமணம் நடக்கிறது. குடும்பத்திற்குச் சொந்தமான 300 கோடி ரூபாய் சொத்து வேண்டுமென்றால் முதல் இரவில் மனைவி மீது சுண்டு விரல் கூட படக்கூடாது என்கிறார் சாந்தனுவின் தாத்தா நடிகர் பாக்யராஜ்.

அப்படி முதரலிரவு நடந்து விட்டால் 300 கோடி சொத்தும் அனாதை ஆசிரமத்திற்கு எழுதி வைத்துவிடுவேன் என்கிறார். தங்கள் குடும்பத்தில் முதல் இரவில் சும்மா இருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியமே இல்லாமல் போய்விட்டது அதனால், அன்றே அதை முடித்திட வேண்டும் என அதுல்யாவிடம் சொல்கிறார் அவரது அத்தையாக நடித்துள்ள நடிகை ஊர்வசி. அனாதை ஆசிரமத்திற்கு சொத்து சென்றால் அதில் 10 சதவீதம் கமிஷன் வாங்கத் துடிக்கிறார் அக்குடும்பத்தின் மெனேஜரான நடிகர் மனோபாலா. அதனால், சாந்தனு மற்றும் அதுல்யா முதல் இரவு நடக்க என்னென்னமோ செய்கிறார். முதல் இரவு நடந்ததா இல்லையா என்பது தான் இந்த திரைப்படத்தின் கதை.

இந்த திரைப்படத்தில் ஒரே இரவில், அதுவும் முதல் இரவில் நடக்கும் மற்றும் நடக்காத சம்பவங்கள் தான் படத்தின் திரைக்கதையாக அமைந்துள்ளது.

அதை எந்த அளவிற்கு இரட்டை அர்த்த வார்த்தை மற்றும் வசனங்களுடன், மிகவும் ஆபாசமாக சொல்ல முடியுமோ அந்த அளவிற்குச் சொல்லியிருக்கிறார் படத்தின் அறிமுக இயக்குனர் ஸ்ரீஜர்.

திரைப்படத்தின் நாயகனான சாந்தனு, தனது அப்பாவிற்கு ஒரு காலத்தில் ‘முந்தானை முடிச்சு’ படத்தில் இடம் பெற்ற முருங்கைக்காய் சமாச்சாராம் எப்படி பேர் வாங்கிக் கொடுத்ததோ அதைப்போல இந்தப் படமும் தனக்கு பேர் வாங்கித் தரும் என நம்பியிருக்கிறார் போன்று தெரிகிறது. இந்தக் திரைக்கதையை அவரது அப்பா பாக்யராஜ் கேட்டு, தனது மகனையும் நாயகனாக நடிக்க சம்மதிக்க வைத்து அவரும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது வியப்பை வரவைக்கிறது.

மிகவும் நெருக்கமாக நடிக்க வேண்டும், கதாநாயகனுடன் குழைவாகப் பேச வேண்டும் அது போதும் என அதுல்யாவிடம் சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. அனைத்திற்கும் சம்மதம் என சொல்லிவிட்டு அப்படியே நடித்தும் கொடுத்திருக்கிறார் நடிகை அதுல்யா. தமிழ் சினிமாவில் குளியல் காட்சியில் மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு நடித்த நடிகை என்ற பெருமையைப் இந்த திரைப்படத்தின் மூலம் பெறுகிறார் அதுல்யா.

திரைப்படத்தில் நடிகர் பாக்யராஜ் மற்றும் நடிகை ஊர்வசி ஒரு சில காட்சிகளில் வந்து போகிறார்கள். நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஏதோ ஒரு நன்றிக்காக படத்தில் நடித்திருப்பார் போல் தான் விளங்குகின்றது. திரைப்படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர், முனிஷ்காந்த் ஆகியோரும் இந்த திரைப்படத்தில் இருக்கிறார்கள். மேலும் மனோபாலா, மதுமிதா, மயில்சாமி நகைச்சுவை என்ற பெயரில் பார்வையாளர்களின் பொறுமையை சோதிக்கிறார்கள்.

இசையமைப்பாளர் தரண் குமார் இசையில் ஒரு சில பாடல்கள் திரைப்படத்தின் வெற்றிடத்தினை நிரப்புகின்றன. இந்த திரைப்படத்தில் ஒரே வீட்டில், ஒரே ஒரு அறையில் அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அதை தனது ஒளிப்பதிவு திறமையில் எப்படியோ சமாளிக்கிறார் ஒளிப்பதிவாளர் ரமேஷ் சக்கரவர்த்தி.

தான் தயாரித்த திரைப்படத்தையே அதே திரைப்படத்திலேயே கிண்லடித்துக் காட்சி வைக்கும் தயாரிப்பாளரையும், இயக்குனரையும் இப்போது தான் முதன் முதலாகப் பார்க்கிறோம்.