ஆன்டி இண்டியன் – விமர்சனம்

0

தமிழ் சினிமாவில் வரலாற்றில் படத்தில் கதாநாயகன், கதாநாயகி, காமெடி நடிகர்கள் இல்லாமல் ஒரு படம் வருகிறதென்பது அபூர்வமான ஒரு விஷயம். அப்படியான ஒரு விஷயத்தைச் செய்து காட்டியிருக்கிறது என்று இந்த ஆன்டி இண்டியன் திரைப்படத்தினை நாம் கூறலாம்.

தமிழ் திரைப்படங்களைக் தமது விருப்பத்துக்கு கண்டபடி விமர்சனம் செய்பவர் என்று பெயரெடுத்தவர் ப்ளூசட்டை மாறன் என்கிற இளமாறன். தமிழ் சினிமாவை அதிகம் விமர்சிப்பவர்கள் படங்களை இயக்க முன் வர மாட்டார்கள். ஆனால், இளமாறன் தன் படத்திற்கு வரப் போகும் விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு படத்தை இயக்கியிருக்கின்றமை பாராட்ட வேண்டிய விடயம்.

இந்த திரைப்படம் சொல்ல வரும் கருத்து என்னவோ நல்ல கருத்துதான். ஆனால், அதை சாதாரண உருவாக்கத்துடன் மட்டுமே சொல்லியிருப்பதுதான் படத்தின் காணப்படும் மிகப்பெரும் குறையாகவுள்ளது.

விளம்பரங்களை வரையும் ஓவியரான பாட்ஷா என்பரை யாராலோ கொலை செய்யப்படுகிறார். அவரது உடலுக்கு இறுதிச் சடங்கினை செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. பாட்ஷா முஸ்லிம் மதத்தினை செந்தவர் என்பதாலும், அவரது அப்பா ஒரு முஸ்லிம் என்பதாலும் இஸ்லாமிய முறைப்படி பாட்ஷாவின் உடலினை அடக்கம் செய்ய உடலை எடுத்துச் செல்கின்றனர்.

அங்கு முஸ்லிம் மக்கள் அவரின் உடலை முஸ்லிம் முறைப்படி அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதனால், அவரது உடலை இந்துமத முறைப்படி அடக்கம் செய்ய ஏற்பாடு நடந்து, இடுகாடு சென்றால் அவர் இந்து அல்ல முஸ்லிம் எனக்கூறி, அங்கும் அடக்கம் செய்ய முடியாது என சொல்லிவிடுகிறார்கள்.

திரைப்படத்தில் பாட்ஷாவின் அம்மா, இந்துவாக இருந்து கிறிஸ்துவராக மதம் மாறியவர் என்பதால் கிறிஸ்துவர்கள் பாட்ஷாவின் உடலை அடக்கம் செய்ய முன் வருகின்றனர். இதனால், குழப்பமான சூழல் ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினையை ஒரு அரசியல் சர்ச்சையுடன் தீர்த்து வைக்கப்படுகிறது. அது என்னவாக அமையும் என்பது தான் படத்தின் மீதிக் கதையாக அமைந்துள்ளது.

இந்த திரைப்படத்தில் கதாநாயகன் என்று யாரும் கிடையாது, கதாநாயகி என்றும் யாரும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இறந்து போன பாட்ஷா என்பவரின் உடலுக்கு இறுதி மரியாதை செய்ய வருபவர்களும், அந்த உடலை வைத்து அரசியல் செய்பவர்களும் தான் இந்த திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ஆக உள்ளனர். ஒவ்வொருவருக்குமே சரியான முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் என்பது குறிப்பிட வேண்டிய விடயம்.

பாட்ஷாவின் தாய் மாமன் மற்றும் அவரினை சார்ந்த இந்து கட்சியின் தலைவர், பாட்ஷாவின் சித்தப்பா மற்றும் அவரினை சார்ந்த முஸ்லிம் மதத் தலைவர்கள், பாட்ஷவின் அம்மா மற்றும் அவரினை சார்ந்த கிறிஸ்துவ மதத் தலைவர்கள் என மூன்று மதத்தைச் சேர்ந்தவர்களும் அந்த உடலை வைத்து தங்கள் மதத்திற்காக அரசியல் செய்கிறதை போன்று படமாக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம்.

மேலும் இவர்கள் தவிர குறித்த பிணத்தை வைத்து அரசியல் செய்யும் ஆளும் கட்சி முதல்வரான ராதாரவி, அவருக்கு ஆலோசனை சொல்லும் உதவி பொலிஸ் கமிஷனர் ஆடுகளம் நரேன், பொலிஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு எண் முத்துராமன் என இன்னுமொரு பக்கத்தில் இடைத் தேர்தல் அரசியல் நடக்கிறது.

மதம் மற்றும் அரசியல் இது இரண்டும் மக்களை என்ன பாடுபடுத்துகிறது என்பதை அழுத்தம் மிக திருத்தமாகவும் சொல்கிறார் இயக்குனர். இந்த திரைப்படத்தில் சில சாதாரண மனிதர்களை வைத்து கேள்விகளையும் கேட்க வைத்திருக்கிறார்.

திரைப்படத்தில் சரளமான கெட்ட வார்த்தைகள் அடிக்கடி வந்து போகின்றன. இதற்கு முன்பு தமிழ் சினிமாவில் இப்படியெல்லாம் அனுமதித்ததே இல்லை என்றே கூறலாம்.

படத்தின் மைனஸாக பார்த்தால் படத்தின் மேக்கிங் தான். ஒரு சினிமா போன்ற உருவாக்கமில்லாமல் சமூகவலைத்தளமான யூடியுபிற்காக எடுத்தது போன்ற ஒரு உருவாக்கமே இந்த திரைப்படத்தில் தெரிகிறது.