பேச்சுலர் – விமர்சனம்

0

கதாநாயகியை ஏமாற்றிய கதாநாயகன் என்ற வகையான பல கதைகள் தமிழ் சினிமாவில் வந்தநிலையில், அந்த வகையில் மீண்டும் வந்திருக்கும் மற்றுமொரு படம் தான் இது.

ஐ.டி. துறையில் இருக்கும் இன்றைய பேச்சுலர்களில் இந்தப் படத்தின் கதாநாயகன் எப்படி இருக்கிறார் என்பது தான் படத்தின் கதையாகும். காமமும், வெளிப்படையான வசனங்களும் படத்தில் இருந்தால் இன்றைய ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்ற ஒரு தப்புக் கணக்கைப் போட்டிருக்கிறார் படத்தின் அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் என்பது தெளிவாக தெரிகின்றது.

எந்த ஒரு விடயமாக இருந்தாலும் அதை எப்படி சொல்கிறார்கள் என்று தான் திரைப்பட ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் ஆரம்பத்தில் அதை சரியாகச் செய்திருக்கும் இயக்குனர், இடைவேளைக்குப் பின்னர் திரைக்கதையை எப்படி நகர்த்திச் செல்வது என்பதில் தடுமாறிப் போயிருப்பது அவரின் அனுபவமின்மையினை எடுத்துக்காட்டுகின்றது.

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்து இளைஞனாக நடித்திருக்கும் ஜிவி பிரகாஷ்குமார் பெங்களூரில் ஐ.டி. வேலை கிடைத்துச் செல்கிறார். அங்கு தனது நண்பர்களுடன் தங்கியிருக்கப் பிடிக்காமல் வேறொரு நண்பன் ‘லிவிங் டு கெதர்’ ஆக இருப்பதைப் பார்த்து அந்த வீட்டிலேயே சண்டை போட்டுத் தங்குகிறார். அந்த வீட்டில் வேறொரு அறையில் படத்தின் கதாநாயகி திவ்யபாரதி தங்கியிருப்பது தான் அதற்குக் காரணமாகும்.

தனது நண்பன் வெளிநாடு சென்று விட, ஜிவியும் கதாநாயகி திவ்யாவும் அந்த வீட்டில் தனியாக வசிக்க வேண்டிய சூழல்நிலை ஏற்படுகின்றது. இருவரும் நெருக்கமாக ஒரு சந்தர்ப்பம் அமைய, அந்த நெருக்கம் அப்படியே உடலால் இணைந்துவிடுகிறதை போன்று கதையினை வடிவமைத்துள்ளார். அதனால் திவ்யபாரதி கர்ப்பமடைய, அந்தக் கர்ப்பத்தை ஜிவி கலைக்கச் சொல்ல பிரச்சினை ஆரம்பமாகிறது. திவ்யா அக்காவின் வக்கீல் கணவர் ‘குடும்ப வன்முறை’ என சித்தரித்து வழக்கு தொடர அதன்பின் என்ன என்பது தான் படத்தின் மீதிக் கதையான அமைந்துள்ளது.

கதாநாயகி திவ்யாவைப் பார்த்ததும் கதாநாயகன் ஜிவிக்கு காதல் பார்வை வருவதை விட அவள் மேல் காமப் பார்வை தான் அதிகமாக வருகிறது. படம் முழுவதும் ஆங்காங்கே முத்தக் காட்சிகள், நெருக்கமான காட்சிகள், நெருடலான வசனங்கள் என நெளிய வைத்துள்ளது. படத்தின் இடைவேளை வரை உள்ள காட்சிகளில் காமத்தைத் தவிர வேறொன்றுமில்லை என்று சொல்லுமளவிற்கான காட்சிகள் தான் அதிகம் அமைந்துள்ளது. ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்திற்குப் பிறகு ஜிவி பிரகாஷ்குமார் இப்படியான படத்தில் நடிக்க வேண்டியதன் காரணம் என்னவோ ?. என்று ரசிகர்கள் மனதில் கேள்வி ஏழ தான் செய்கின்றது.

கதாநாயகியாக அறிமுகப்படத்திலேயே இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க தனி துணிச்சல் வேண்டும் மேலும் மேக்கப்பில்லாத நடிகை திவ்யபாரதி அவரது கதாபாத்திரத்தில் அழுத்தமாய் நடித்திருக்கிறமை குறிப்பிடத்தக்கது. படத்தின் இடைவேளை வரை ஜிவியை காமப் பார்வையில் கொல்பவர் அதன் பிறகு அழுதழுதே படத்தின் மீதி பகுதியில் கொல்கிறார். 2021 இலும் தன்னை ஏமாற்றத் துணியும் காதலனை (?) எதிர்க்கும் துணிச்சல் இல்லாத பெண்ணாக இருக்கிறாரே என்பது ஆச்சரியம் தான் ரசிகர்களுக்கு தோன்றுகின்றது. லிவிங் டு கெதர் ஆக வாழ்பவர், திருமணத்திற்கு முன்பே உறவு கொள்ள சம்மதிப்பவர் எதிர்க்க மட்டும் துணிச்சல் இல்லாதவரா இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாக அமைந்துள்ளது.

படத்தில் நண்பர்கள் என பத்துப் பதினைந்து பேர் நடிகர் ஜிவி பிரகாஷுடன் எப்போதும் இருக்கிறார்கள். சென்னை நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் போது கூட பெங்களூருவில் வேலை பார்க்கும் நண்பர்கள் சென்னைக்கு வந்து உடன் தங்கியிருப்பதெல்லாம் என்ன லாஜிக்கோ, அவ்வளவு நெருங்கிய நண்பர்களா ? என கேள்வி எழுகின்றது. படத்தில் வருகின்ற மற்ற நடிகர்களில் பகவதி பெருமாள், முனிஷ்காந்த் ஆகியோருக்கு மட்டும் நடிக்கக் கொஞ்சம் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. படத்தில் நண்பர்களில் யாராவது ஒருவருக்கு மட்டும் அதிக வசனம் கொடுக்கலாம் என அருண் குமாருக்குக் இயக்குனர் கொடுத்திருக்கிறார்.

கூறும் அளவிற்கு படத்தில் அமைந்த பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லை. சில உணர்வுபூர்வமான காட்சிகளில் பின்னணி இசையில் இசையமைப்பாளர் சித்து குமார் கவனிக்க வைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தக்காலத்து இளைஞர்களின் பெற்றோர்கள், குறிப்பாக பெண்களைப் பெற்றவர்கள் தங்கள் பெண்களுக்கு வெளியூர்களில் வேலை கிடைத்தால், இந்தப் படத்தைப் பார்த்தால் அவர்களை வேலைக்கு அனுப்ப ரொம்பவே யோசிப்பார்கள் என்பது நன்றாக புரிகின்றது.