3.33 – விமர்சனம்

0

தமிழ் சினிமாவை பொருத்தவரையில் உளவியல் ரீதியான படங்கள் வெளிவருகின்றமை அபூர்வமாகத்தான் நடைப்பெறும். அப்படி வரும் படங்கள் சாதாரண ரசிகர்களை அவ்வளவு சீக்கிரம் கவரும் விதத்தில் அமைவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று இந்தப் படமும் ஒரு உளவியர் ரீதியான படம் தான். அதை மாறுபட்ட விதத்தில் கொடுக்க வேண்டுமென முயற்சி செய்துள்ளார் இயக்குநர் நம்பிக்கை சந்துரு.

பிக்பாஸ் புகழ் சாண்டி, லோன் வாங்கி ஏதாவது தொழில் செய்ய வேண்டுமென இருப்பவர். கதையின் படி கணவனால் கைவிடப்பட்ட சகோதரி, சகோதரியின் மகள் மற்றும் தாய் என சிறு வீட்டில் வசிக்கிறார். 3.33 என்ற மணியில் பிறந்த அவருக்கு அந்த நேரத்தில் ஏதோ ஒன்று நடக்கிறது. சரியில்லாத கெட்ட, கெட்ட கனவாக வருகிறது. அவரைச் சுற்றி ‘நெகட்டிவ்’ சக்திகள் அதிகம் இருக்கிறது என்கிறார் குருவானவர். இது ஒரு உளவியல் ரீதியான பிரச்சினை என்கிறார் வைத்தியர். இதனால், மனதளவில் கடும் தடுமாற்றத்தில் இருக்கும் சாண்டி அதிலிருந்து விடுபட்டாரா இல்லையா என்பது தான் குறித்த படத்தின் மீதிக் கதை ஆகும்.

ஒரு வீட்டுக்குள்ளேயே படத்தை நகர்த்தியிருப்பது பாராட்டுக்குரிய விடயமாகும். அதில் முடிந்த அளவிற்கு விதவிதமான கோணங்களில் ஒளிப்பதிவு அமைத்து ஒரே வீட்டில் படம் நகர்வது போன்ற உணர்வை ஏற்படுத்தாமல் இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

சாண்டியை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலகலப்பான ஒருவராகத்தான் பார்த்துள்ளோம். இந்தப் படத்தில் படம் முழுவதும் அவரை மிகவும் சீரியசான ஒரு இளைஞராகப் பார்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரும் தன்னால் முடிந்த வரையில் இயல்பாக தமது நடிப்பினை நடித்திருக்கிறார். ஆனால், சாண்டி என்றாலே ஏரியாவில் ஒரு கலகலப்பு இருக்கும், அது இந்தப் படத்தில் மிஸ்ஸிங் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சாண்டிக்குப் பிறகு அவரது தாயாக ரமா மற்றும் அக்கா ரேஷ்மா ஆகியோரும் படம் முழுவதும் வருகிறார்கள். திடீரென இருவரும் பேயாக மாறி நம்மை பயமுறுத்துகிறார்கள்.

சாண்டியின் காதலியாக வரும் ஸ்ருதி செல்வம். காதலன் சாண்டிக்கு ஆதரவாக இருக்கிறதை போன்று கதையினை வடிவமைத்திருந்தாலும் அவரும் ஒரு கட்டத்தில் சாண்டியை பயமுறுத்தும் விதத்தில் நடந்து கொள்கிறார்.

படத்தின் டீசர், டிரைலர்களில் கௌவுதம் மேனன் பெயர் வருவதால் படம் முழுவதும் இருப்பார் போலிருக்கிறது என்பதில் ரசிகர்களுக்கு இங்கு ஏமாற்றம் தான் மிச்சம். இரண்டே இரண்டு காட்சியில் தான் நடித்திருக்கிறார். படத்திற்கு மக்களை மற்றும் கௌவுதம் மேனனின் ரசிகர்களை வரவழைப்பதற்காக அவருடைய பெயருக்கு முக்கியத்துவம் கொடுத்து வியாபார யுக்தியாக ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார்கள். சரவணன், மைம் கோபி ஒரே ஒரு காட்சியில் வந்து போகின்றமையும் உள்ளடங்கியுள்ளது.

இசையமைப்பாளரான ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் ஒரு ஹாரர் படத்திற்கு பின்னணி இசையால் பார்வையாளர்களுக்கு என்ன பயத்தை ஏற்படுத்த முடியுமோ அதைச் செய்திருக்கிறார். சதீஷ் மனோகரன் ஒளிப்பதிவு ஒரு வீட்டுக்குள்ளேயே அசத்தலாய் அமைந்துள்ளமை இங்கு விஷேடமாகும்.

ஒரு ஹாரர் படம் என்றால் விறுவிறுப்பாக நகர வேண்டும். ஆனால், மிக மெதுவாக காட்சிகளை நகர்த்தியிருக்கிறார்கள். 3.33 பிரச்சினையை ஒரே முறை காட்டினாலே போதும், அதைத் தொடர்ந்து வெவ்வேறு விதத்தில் காட்டி பொறுமையை சோதிக்கிறார்கள் என்பதே உண்மை.