கேரளாவில் தள்ளிப்போன புஷ்பா ரிலீஸ் ; ரசூல் பூக்குட்டி விளக்கம்

0

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் தெலுங்கில் உருவாகியுள்ள புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் ‘புஷ்பா ; தி ரைஸ்’ என்கிற பெயரில் இன்று வெளியாகியுள்ளது. நடிகை ராஷ்மிகா கதாநாயகியாக, நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடிக்க, நடிகை சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆடியுள்ளார். பான் இந்தியா ரிலீசாக வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்த திரைப்படம் உலகெங்கிலும் இன்று வெளியானாலும் கூட கேரளாவில் இதன் மலையாள பதிப்பு இன்று வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் கேரளாவில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஒலிப்பதிவு பணிகளை பொறுப்பேற்றுள்ள ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இஞ்சினியரான ரசூல் பூக்குட்டி, இந்த திரைப்படம் தாமதமாவது குறித்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும் போது, “இந்த திரைப்படத்தின் ஒலிப்பதிவு பணிகளில் புதிய தொழில்நுட்பம் ஒன்றை பயன்படுத்தியுள்ளோம். ஆனால், இந்த மென்பொருளில் ஏற்பட்ட எதிர்பாராத பிழை காரணமாக அதன் அவுட் எடுக்கும் போது நாங்கள் எதிர்பார்த்த தரத்தில் பிரின்ட் எடுக்க முடியவில்லை. அதனால் ரசிகர்களுக்கு மிகச்சிறந்த படைப்பினை நாங்கள் கொடுக்க வேண்டும் என்பதால் தான் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த திரைப்படத்தின் பிரிண்ட்டுகள் தயாராகிக்கொண்டு இருக்கின்றன” என கூறியுள்ளார்.

இதனால் புஷ்பா திரைப்படத்தின் மலையாள பதிப்பு ஒரு நாள் தாமதமாக நாளை (டிசம்பர் 18) தான் வெளியாகும். என்றாலும், கேரள திரையரங்குகளில் இன்று புஷ்பா திரைப்படத்தின் தமிழ்ப்பதிப்பினை திரையிட்டு திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்களை ஒரு வழியாக சமாளித்து வருகின்றனர்.