விக்ரம் – கமல்ஹாசன் பட டிரைலர்களில் புதிய சாதனை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘விக்ரம்’. இப்படத்தின் டிரைலர் நேற்று இரவு வெளியிடப்பட்டது. வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாகவே 95 லட்சம் பார்வைகளைக் கடந்து 1 கோடியை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது.

கமல்ஹாசன் நடித்து இதுவரை வெளிவந்த படங்களின் டிரைலர்களில் ‘விஸ்வரூபம் 2’ டிரைலர்தான் அதிகபட்சமாக 82 லட்சம் பார்வைகளைப் பெற்றிருந்தது. அதை இப்போது ‘விக்ரம்’ டிரைலர் கடந்துவிட்டது. இளம் தலைமுறை இயக்குனர், இசையமைப்பாளர் ஆகியோருடன் இணைந்த காரணத்தால் தான் கமல்ஹாசனுக்கு இந்த புதிய சாதனையை படைக்க முடிகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

இதற்கு முன்பாக வெளிவந்த ‘விக்ரம்’ தலைப்பு அறிவிப்பு டீசர் 3 கோடி பார்வைகளையும், ‘விக்ரம்’ முதல் பார்வை டீசர் 1 கோடியே 80 லட்சம் பார்வைகளையும், ‘விக்ரம்’ முதல் சிங்கிள் ‘பத்தல பத்தல’ 2 கோடியே 30 லட்சம் பார்வைகளையும் பெற்றுள்ளதை வைத்தும் அந்த உண்மையை அறிந்து கொள்ளலாம்.

‘விக்ரம்’ டிரைலரைப் பார்த்த பின்பு படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகி இருக்கிறது. இப்படம் இந்திய அளவில் வரவேற்பைப் பெறும் ஒரு பான்-இந்தியா படமாக இருக்கும் என கமல்ஹாசன் ரசிகர்கள் மகிழ்ந்து வருகிறார்கள்.