திறமைக்கு சவால் விடும் படங்களில் நடிப்பேன்; துஷாரா விஜயன்

0

நமக்கு வெற்றி கிடைத்தால் அதனை தலைக்கு ஏற்றாமல் இருப்பதும், தோல்வி கிடைத்தால் அதனை சமாளித்து நாம் அடுத்தகட்டத்திற்கு நகர்வதும் வாழ்க்கையில் அவசியம்.

திரையுலகினை பொறுத்தவரை வெற்றி, தோல்வி இரண்டையும் நம்பக்கூடாது. என்னுடைய நடிப்பு திறமைக்கும் சவால் விடும் படங்களில் தான் நான் நடிப்பேன், சார்பட்டா பரம்பரை கதாநாயகி துஷாரா விஜயன் என தெரிவித்தார்.

நடிகையான துஷாராவின் வாழ்கை பயணத்தில் முக்கியமான தருணம் எது?

நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், தேர்வு செய்யும் திரைப்படம் உட்பட வாழ்வில் நான் எடுக்கும் முடிவுகள் அனைத்துமே எனக்கு முக்கியமான தருணமே.

இதுவரை வாழ்க்கையில் நடிகை துஷாரா கற்றுக்கொண்ட பாடத்தில் முதன்மையானது என்றால் அது என்ன?

வாழ்வினை பொறுத்தவரையில் கடுமையான உழைப்பும், பொறுமையும் தான் என்னை தற்போது இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது என்று கூறலாம். ஆகவே எனக்கு இந்த இரண்டுமே ரொம்ப முக்கியமானது.

மொடலிங், சின்னத்திரை, சினிமா இதில் உங்களுக்கு பிடித்தது எது?

அதில் எவ்விதமான சந்தேகமே வேண்டாம். சினிமா தான் எனக்கு பிடிக்கும்; எனக்கு சினிமா தான் எல்லாமே! என்றே கூறலாம்.

திரையுலகினை பொறுத்தமட்டில் கோலிவுட்டில் பெண்களுக்கான வாய்ப்பு, அதுவும் புதியவர்களுக்கான களம் காணுபவர்களுக்கான வாய்ப்பு எப்படி உள்ளது?

கோலிவுட்டில் மட்டுமல்ல; எனக்கு தெரிந்து சமீபகாலமாக திறமை இருந்தால், எல்லா இடத்திலும் பெண்கள் மதிப்பளித்து அங்கீகரிக்கப்படுகின்றனர்.

நமக்கான வாய்ப்பை நாமே உருவாக்கி கொள்ள வேண்டும். மேலும் நமக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவும் தெரிந்துக்கொள்ள வேண்டும். இது ரொம்பவே முக்கியம். நமது தனி திறமையை வளர்த்துக் கொண்டே இருந்தால், நமக்கு தகுந்த வாய்ப்பு கிடைக்கும்.

சினிமா துறையில் நம்ப வேண்டியது மற்றும் நம்ப கூடாதது எது?

அதற்கு பதில் வெற்றியும், தோல்வியும் மட்டும் தான். இரண்டுமே அடுத்தடுத்து கிடைக்குமா என்றால் அது தெரியாது. வெற்றி கிடைத்தால் நாம் அதனை நமது தலைக்கு ஏற்றாமல் இருப்பதும், தோல்வி கிடைத்தால் அதை சரியாக அணுகி நமது அடுத்தகட்டத்திற்கு நகர்வதும் அவசியம். சினிமாவை பொறுத்தவரை நாம் வெற்றி, தோல்வி இரண்டையும் நம்பக்கூடாது.

உங்களுக்கு அதிர்ஷ்டம் மேல் நம்பிக்கை உண்டா?

அது குறித்து எனக்கு தெரியல. சிலர் என்னை ரொம்ப அதிர்ஷ்டசாலி பெண் என்பர். சீக்கிரமாகவே சினிமாவில் முன்னுக்கு வந்து விட்டாய் என சிலர் கூறுவர். ஆனால், அதற்கு பின்புலத்தில் எனது ஏழு ஆண்டு உழைப்பு உண்டு அது மக்களுக்கும் பார்ப்பவர்களும் தெரியாது. ஒரு வேளை வாழ்வில் கடின உழைப்பை தான் மற்றவர்கள் அதிர்ஷ்டம் என்கிறார்களோ என்னமோ!

உங்களில் எதிர்காலத்தில் சினிமா துறையிலிருந்து அரசியல் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதா?

எனக்கு அரசியல் மேல் சிறுவயது முதலே ஈடுபாடு இருந்ததில்லை. ஆனால், எனக்கு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அனைத்து மக்களையும் சரிசமமாக நடத்த வேண்டும். பொது அறிவு வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற வேட்கை எப்போதும் என்னிடம் உள்ளது. என்னால் முடிந்த வரை வாழ்வில் தினமும் கற்றுக் கொண்டே இருப்பேன்.

உங்களுக்கு வாழ்வில் காதல் திருமணமா? அல்லது வீட்டில் நிச்சயிக்கும் திருமணமா?

என்னை பொறுத்தவரை இப்போது எனது திருமணத்தை பற்றி அடுத்த 10 வருடங்களுக்கு பேச வேண்டியதில்லை என்று கூறுவேன். அதில் தற்போது பெரிய ஈடுபாடும் இல்லை என்றே கூறலாம். முதலில் இப்போதைக்கு நான் எடுத்துக் கொண்ட எனது முயற்சியில் சாதிக்க வேண்டும். மேலும் எனக்கு காதல் திருமணமா அல்லது நிச்சயித்த திருமணமா என்பதும் இப்போதைக்கு தெரியாது.

திரைப்படங்களில் எந்த மாதிரி கதாபாத்திரங்களுக்கு முன்னுரிமை தர நினைக்கிறீர்கள்?

முதலில் என்னை கதைகள் கவர வேண்டும். நான் நடிக்கும் திரைப்படத்தில் எனது காட்சிகள் இரண்டு நிமிடங்கள் வந்தாலும், அது எனது ரசிகர்கள் மனதில் கண்டிப்பாக பதிய வேண்டும். மேலும் வாழ்க்கை வரலாற்று மற்றும் வாழ்வியல் குறித்த திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்.

அடுத்து நடித்து வரும் திரைப்படங்கள்?

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன்தாஸ் உடன் அநீதி படமும், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் உடன் நட்சத்திரம் நகர்கிறது படத்திலும் நடிக்கிறேன். மேலும் புதிய கதையும் கேட்டு வருகிறேன். திறமைக்கு சவால்விடும் படம் என்றால் நான் அதில் கண்டிப்பாக நடிப்பேன்.