படப்பிடிப்பில் பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளை கொண்டாடிய சல்மான்கான்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் பூஜா ஹெக்டே தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் தான் அறிமுகமானார். அறிமுகமான சமயத்தில் தமிழ், தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பை பெறாத அவர் அதன்பிறகு மகேஷ்பாபு உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து ஒரு சில வெற்றிப்படங்களில் நடித்தார்.

இந்தநிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வெளியான ஆல வைகுந்தபுரம்லோ என்கிற படத்தில் இடம்பெற்ற புட்டபொம்மா என்கிற பாடலுக்கு அல்லு அர்ஜுனுடன் இணைந்து பூஜாவும் க்யூட்டாக நடனமாடி இருந்தார். இந்தப்பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை சென்று அடைந்தது. அதனை தொடர்ந்து பூஜாவுக்கு விஜய் ஜோடியாக பீஸ்ட், பிரபாஸ் ஜோடியாக ராதே ஷ்யாம் ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதேசமயம் பாலிவுட்டில் சல்மான்கான் நடித்து வரும் பைஜான் படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆனார் பூஜா ஹெக்டே. இந்த படம் தற்போது கிஷிகா பாய் கிஷிகி ஜான் என டைட்டில் மாற்றப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தெலுங்கில் முக்கிய நடிகர்களான வெங்கடேஷ் மற்றும் ஜெகபதிபாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

பிரபல தயாரிப்பாளர் சஜித் நாடிய பாலா தயாரிக்க சார்கான் சப்ஜி என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் இன்று பூஜா ஹெக்டேவின் பிறந்தநாள் என்பதை அறிந்த சல்மான்கான் படப்பிடிப்பில் அவரது பிறந்த நாளை கொண்டாட ஏற்பாடு செய்தார். சல்மான்கான், பூஜா ஹெக்டே ஆகியோருடன் வெங்கடேஷ், ஜெகபதிபாபு ஆகியோரும் பூஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.