புராண காலத்தையும், நவீன காலத்தையும் இணைக்கும் பிரம்மாஸ்த்ரா : அயன் முகர்ஜி

0

நடிகர் அமிதாப் பச்சன், நடிகை மவுனி ராய் மற்றும் நடிகர் நாகார்ஜுனா ஆகியோருடன் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை ஆலியா பட் நடிக்கும் திரைப்படம் பிரம்மாஸ்த்ரா. பேண்டசி திரைப்படமாக உருவாகி வருகிறது. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி திரைப்படம் வெளியாகிறது. இந்த பிரம்மாஸ்த்ரா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன்தினம் இணையத்தில் வெளியிடப்பட்டது. இதில் நடிகர் ரன்பீர் கபூர் சிவன் சிலை முன்பு அவரை போன்று ஆக்ரோஷமாக நின்று கொண்டிருக்கின்றதை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் குறித்து இயக்குனர் அயன் முகர்ஜி கூறியிருப்பதாவது : கடந்த 10 வருடங்களாக என்னுள் வாழ்ந்த கதை தான் இது. இத்திரைப்படத்தினை குடும்பத்தினரோடு இணைந்து கொண்டாட ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். இந்தியாவில் இதற்கு முன்பு பார்த்தது போல் இல்லாத சினிமா அனுபவத்தையும், சாகசங்கள் நிறைந்த பயணமாகவும், உணர்வுபூர்வமான இதயம் நிறைக்கும் படைப்பாகவும், இந்ததிரைப்படத்தை பார்வையாளர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

பிரம்மாஸ்திரா திரைப்படமானது அதிநவீன தொழில்நுட்பத்துடன், ஒவ்வொரு திரைக்காட்சியையும், இந்தியாவில் இதுவரை இல்லாதளவில், உலகளாவிய தரத்தில் உருவாக்கி வருகிறோம். இப்பொழுது பார்வையாளர்களை திரையரங்குகளில் மீண்டும் உற்சாகத்துடன் பார்ப்பது, எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் அளிக்கின்றது.

இந்த திரைப்படம் 3 பகுதிகள் கொண்ட டிரையாலஜி திரைப்படமாகும். இந்திய புராணங்களில் ஆழமாக வேரூன்றிய கருத்துக்கள் மற்றும் கதைகளால் ஈர்க்கப்பட்டு, அந்த பின்னணியில் நவீன உலகித்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பேண்டஸி சாகசம், நல்லது மற்றும் தீமை, காதல் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் காவியக் கதை, இவை அனைத்தும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்தியாவில் இதுவரை திரையில் யாரும் பார்த்திராத வகையில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.

பிரம்மாஸ்த்ரா படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு செப்டெம்பர் 9 ஆம் திகதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.